சனி, 7 நவம்பர், 2015

என் பெயர்....

முழு நிலவு
முக்கால் நிலவு
அரை நிலவு
கால் நிலவு
மறை நிலவு
முழு நிலவு

நிலபிரபுத்துவம்
ஜனநாயகம்
கம்யுனிசம்
சோஷியலிசம்
ஜனநாயகம்

மாறிக்கொண்டே இருக்கும்
உருண்டுக்கொண்டே இருக்கும்
என் தொழில் என்ன?
நான் ரகசியங்கள் காக்கும் நூலகம்

யாருக்காக இதெல்லாம்?
அரசுக்கா? மக்களுக்கா?
குடும்பதிர்க்கா? எதிர்காலத்திற்க்கா?
மாறாது இந்த பாரம்..

ஏன் இந்த வேலை?
ஏன் இந்த உளைச்சல்?
தெய்வம் இல்லை தெரியும்
கல்லிடமா சொல்வது?

நண்பனிடம் சொன்னால்
நாளைக்கு பால்
நாயிடம் சொன்னால்
பாவம் புரியாது
சவத்திடம் சொன்னால்
அது சவம்
நண்பனிடம் சொன்னால்
சுழல் சுழல்..

வேலை வேண்டாம்
வாழ்க்கை வேண்டாம்
உணவு வேண்டாம்
உறவு வேண்டாம்
அறிவு வேண்டாம்
இல்லை, அறிவு வேண்டும்

அறிவு உண்டு
அட வேலை உண்டு
வாழ்க்கை உண்டு
உணவு உண்டு
உறவு உண்டு
இல்லை, உறவு இல்லை
அது தான் என் வேலை
நான் ரகசியங்கள் காக்கும் நூலகம்

என் பெயர் பாண்ட்..
ஜேம்ஸ் பாண்ட்..






திங்கள், 27 ஜனவரி, 2014

மாயை மாயையே..

கண்ணில் தோன்றியது..
நெஞ்சில் நின்றது..
மாற்றவும் முடியாது..

மாயை மாயையே..

கர்ம நன்மைகள் செய்தாலும்..
மரணவாசிகளை மீட்டாலும்..
நன்மைக்கு நன்மை செய்தாலும்..

மாயை மாயையே..

துயரத்தில் நனைந்தாலும்..
அவள்முகம் மறப்பதில்லை..
மரணமே மறந்துவிடும்..

மாயை மாயையே..

தகுதியற்றவன் நான்..
தகுதியற்றவன் நீ..
தகுதியற்றவன் அவன்..
தகுதியற்றவளும் அவள்...

மாயை மாயையே..


திங்கள், 20 ஜனவரி, 2014

இந்த ஒரு நிமிடம்..

இந்த ஒரு நிமிடம்..
இந்த ஒரு நிமிடம்..

எத்தனை இன்பங்கள்..
எத்தனை ஆசைகள்..
எத்தனை வேதனைகள்..
ஏன் மனிதன் சிந்திப்பதில்லை..
கல்வி கொடுக்கபட்டிருக்கிறது ..
நல்ல சூழ்நிலை இருக்கிறது..
ஆனாலும் சுயநலத்தின் ஆட்சி..
யார் தடுப்பது?

இந்த ஒரு நிமிடம்..
இந்த ஒரு நிமிடம்..

அடுத்த நிமிடம் வந்துவிட்டால்,
என்ன வரும் யாரறிவார்..
என் வீடு என் நாடு என் மக்கள் என் மொழி
நினைத்து வாழ்தல் செழிப்போ, அறியாமையோ?
அறியாதவை எண்ணத்தக்கதல்ல..
அறிந்தவை, மறந்துவிடும்..
இந்த நிமிடம் போதாதா?

இந்த ஒரு நிமிடம்..
இந்த ஒரு நிமிடம்..

நிழலில் குளிர்ச்சி ஏன்?
சாரலில் மகிழ்ச்சி ஏன்?
மரணத்தில் நெகிழ்ச்சி ஏன்?
பாசத்தில் கண்ணீர் ஏன்?
சாதனையில் பெருமை ஏன்?
சாவதில் பயமும் தான் ஏன்?

இந்த ஒரு நிமிடம்..
இந்த ஒரு நிமிடம்..

கவலைகள் மறந்துவிடும்..
நினைவுகள் மறந்துவிடும்..
பந்தங்கள் மறைந்துவிடும்..
கனவுகளும் கலைந்துவிடும்..
மயிருகளும் நரைத்துவிடும்..
உதவிகளும் மறந்துவிடும்..
சக்தியற்ற மதமடா மனிதன்..

இந்த ஒரு நிமிடம்..
இந்த ஒரு நிமிடம்..

புதன், 24 ஜூலை, 2013

கொதிக்கும் சூரியன்..ஆனாலும் காதல்..

சுட்டெரிக்கும் வெய்யில்.. பாலையில் கூட இவ்வளவு வெப்பம் இருந்திருக்காது.. அது தான் சென்னையின் அன்றைய நிலைமை..

கூட்டமான பேருந்து நிறுத்துமிடத்தில் அவன், அவள்.. அவளில்லாமல் அவன் இல்லை.. அவனில்லாமலும் அவள் இல்லை என்றே சொல்லலாம்.. அவர்கள் பேசிக்கொள்வதில்லை, அனால் கண்கள் வார்த்தைகளை கொட்டும்.. அவர்கள் தினமும் இப்படிதான் பார்வைகளில் உரையாடுவார்கள்..

வேளச்சேரி போகும் பஸ் தினமும் அரைமணி நேரத்திற்கு ஒன்று தான்.. எட்டு மணி பஸ்ஸை அவள் மிஸ் பண்ணிவிட்டால் எட்டரை வரையில் வியர்த்து ஒழிகிக்கொண்டு நிற்க வேண்டும்.. அந்த அரை மணி நேரம் தான் இவர்களின் ஒரு யுக நீள பாலம்..கைகள் கோர்த்துக்கொண்டு நடப்பதற்கான ஒரு வாய்ப்பு..

இப்போது நிலைமை மிகவும் முன்னேறி விட்டது.. அவள் அவனைப்பார்த்து சிரிப்பதும், அவன் அவளைப்பார்த்து வெட்கப்படுவதும் வழக்கமாகி விட்டது.. சில நேரத்தில் அவன் நெற்றியில் வழியும் வியர்வை துளிகளைக்கூட இவள் தனது கைக்குட்டையால் துடைத்து விடுவாள்.. சுற்றியிருக்கும் மக்களும் அதைக் கண்டுக்கொள்வதாக தெரியவில்லை.. பஸ் தான் அவர்களுக்கு முக்கியம்.. இளைஞர்கள் பப்ளிக்கில் அன்பை வெளிப்படுத்துவது சகஜமாகிவிட்டது.. மெட்ராஸ் மிகவும் முன்னேறிவிட்டது என்று தான் கூறவேண்டும்..

தன் கேர்ள்பிரண்டிர்க்கு சாக்லேட் வாங்கிக்கொடுப்பது தான் வழக்கம்... அனால் இங்கு நடப்பதோ வேறு மாதிரி.. அவள் இவனுக்கு தினமும் சாக்லேட் வாங்கிக்கொடுக்கிறாள்.. அவன் கொடுப்பதென்னவோ புன்னகை மட்டும் தான்.. 

தினமும் அதே பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏறுபவன் நான்.. இவர்கள் எங்கு பேசிக்கொள்வார்கள் என்று எனக்கு தெரியாது.. இவர்கள் ஒரே பஸ்ஸைக்கூட எடுப்பதில்லை.. ஆனால் பஸ் ஸ்டாப்பில் அலைகள் என்றும் ஓய்வதாக இல்லை! எப்படித்தான் இவ்வாறு இருக்கமுடியும்?

நான் மிகவும் பொறாமைப் படுகிறேன்.. இதே போன்று அவள் என்னிடமும் சிரித்திருந்தால் இந்த அளவிற்கு நான் கடுப்பாயிருப்பேனா என்பது சந்தேகம் தான்.. தினமும் இதே நேரத்தில் தான் நானும் பஸ் எடுக்க வேண்டும்.. அவர்கள் செய்யும் அழிச்சாட்டியங்களை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பது எனது விதி போல தெரிகிறது..

அன்று ஒரு நாள்.. அவள் இருந்தாள் அனால் அவன் இல்லை.. மிக நிம்மதி என்று நான் மனதிற்க்குள் நினைத்துக்கொண்டு ஆனந்தமானேன்.. அதே நேரத்தில் அவளைப்பார்த்தாலும் பாவமாகத்தான் இருந்தது.. அவனைப்பார்க்காத ஏக்கம் அவள் முகத்தில் நன்று விளங்கியது.. என் பொறாமை தான் காரணமோ? மனதை கல்லாக்கிக்கொண்டு நான் செய்தித்தாளை படித்துக்கொண்டிருந்தேன்.. பஸ் வந்தது.. அதில் ஏறிச்சென்றேன்.. அவள் மறைந்தாள்...

அடுத்த மூன்று நாட்களும் இதே மாதிரி தான் இருந்தது.. அவளது முகம் சுருங்கிக்கொண்டே இருந்தது.. அவனைக்காணவில்லை.. எனக்கே என்ன செய்வதென்று தெரியவில்லை.. பஸ் இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடும்..

அப்போது அவள் என்னருகே வந்தாள்..

"ஹல்லோ சார்.. உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா?"

"சொல்லுங்க.."

"தப்பா நெனச்சுக்காதீங்க..உங்கள கொஞ்ச நாளா இந்த பஸ் ஸ்டாப்பில நான் பாக்குறேன்.."

"அதுக்கு?"

"இல்ல சார்.. இங்க ஒரு அம்மா ஒரு அழாகான குழந்தைய கூட்டிட்டு வருவாங்களே.. அவங்கள கொஞ்ச நாளா காணோம்.. அதான் உங்களுக்கு தெரியுமான்னு கேட்டேன்.."

"ஓ தெரியுமே.. அவள் வீட்டுல தான் இருக்கா"

"சார் ஜோக் பண்ணாதீங்க.."

"இல்லே மா.. அவ என் வீட்டுல தான் இருக்காள்.. அவ என் பொண்டாட்டி.."

"அட.. அப்போ அது உங்க குழந்தையா?"

"ஆமாம்.."

"ரொம்ப அழகா இருக்கான் சார்.. பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு..."

"அவளுக்கு ஒடம்பு சரியில்லை.. அடுத்த வாரம் வந்துடுவாள்..."

"சரி சார்.. இந்த சாக்லேட்டை அவனுக்கு குடுத்துடுங்க.."

"இல்லை பரவால்லை.."

"இல்லை சார்..பிளீஸ்.. இல்லாட்டி என்னை மறந்துடுவான்.."

"சரி சரி..குடு.."

"தாங்க்ஸ் சார்.."

அப்போது என் பஸ் வந்தது.. கிளம்பி விட்டேன்..

ஆனாலும் என் மகன் அதிர்ஷ்டசாலி தான்.. எவ்வளவு காதலிகள் அவனுக்கு! அதைப்பார்த்து நான் பொறமை படக்கூடாது.. சாக்லேட்டை என் பையில் வைத்தேன்.. அப்படியே என் இமைகளை மூடினேன்.. சட்டென்று என் குழந்தைப்பருவம் எனக்கு முன்னால் இருள் திரையில் வந்தது..

வியாழன், 23 மே, 2013

கனவு மாளிகை (பாடல்)


Song Recording link here

இசை அமைப்பு, வரிகள், குரல், கித்தார் - ஷங்கர் 

கனவு மாளிகை கருவில் உள்ளது
பிறந்த பிறகு தான் அது சிதைந்தது
மயிரு உதிர்ந்தது உடமை பெருத்தது
வயிறு குறைக்கவே முத்து முத்தாய் வடிந்தது
பசி எடுக்கும் முன்னமே சோறு கிடைத்தது
அரிசி அறைந்ததும் இடமே நாறுது..

பொய் இருக்குது சூதிருக்குது,
பணம் இருக்குது பிணம் இருக்குது,
சிரிப்பிருக்குது வலியிருக்குது,
பழியும் தீர்க்கவே PLAN இருக்குது
பட்டப்படிப்பு கிழிச்சவன் என் காலக்கழுவுறான்
காலைக்கழுவி விட்டு காலவாரப்பாக்குறான்
PA என்பவன் முகஸ்துதியும் செய்யுறான்
முதுகு பின்னையே காரித்துப்புறான்

இப்போ கெளம்புறேன், நான் இப்போ கெளம்புறேன்
அசிங்கப்ப்படும்முன்னே நான் காரில் எறுறேன்
டென்ஷன் ஆகுறேன் நான் டென்ஷன் ஆகுறேன்
BP டாப்லேட்டோடத்தான் ரெண்டு ஷாட்டு அடிக்கறேன்

வீடு வந்ததும் மக்கள் மனு அடுக்கி கிடக்குது
என்னடா கருமம் எல்லாம் அழுது வடியுது
ஜீன்ஸ போட்டுட்டு புள்ளை பார்ட்டி போகுறான்
கேடில்லிருந்தே என் பொண்டாட்டி டாட்டா  காட்டுரா
எந்தப்பக்கம் திரும்பினாலும் வசதி வாழ்க்கை தான்
கனவில் கூட எனக்கு இந்த அமைச்சர் வேஷம்தான்
நட்ட நாடு ராத்திரியில் போனு அடிக்குது
கெழவி இடிச்சு செத்துட்டான்னு புள்ளை ஒளருறான்

எதுவுமே வேண்டாம் எனக்கு எதுவுமே வேண்டாம்
கனவு மாளிகை அது ஒன்று போதுமே
நிம்மதி வேண்டும் ஆத்ம திருப்தியும் வேண்டும்
ஆசை இல்லாத ஒரு அனுபவம் வேண்டும்

கனவு மாளிகை கருவில் மட்டுமா?
விழி மூடி தொங்கடா சாவே கனவு மாளிகை..

 

திங்கள், 16 ஏப்ரல், 2012

ஈழத்தாள்வான்

இந்த சிறுகதையை புரிந்துக்கொள்ள, 'பொன்னியின் செல்வன்' படிக்காத என் நண்பர்களுக்கு, பின்வரும் கதாப்பாதிரங்களின் அறிமுகம் மிக அவசியம்.

ரவிதாசன் & சோமன் சாம்பவன்:
பாண்டிய நாட்டு சதிகாரர்கள்.

பழுவூர் ராணி நந்தினி தேவி: பெரிய பழுவேட்டரையரின் மனைவி. ஆதித்த கரிகாலனை பழிவாங்குவதர்க்காக சபதம் செய்திருப்பவள்.

ஆழ்வார்க்கடியான் / வைஷ்ணவன்: சோழ நாட்டின் முதலமைச்சர், அன்பில் அநிருத்தரின் அந்தரங்கத் தூதன்.

சுந்தரச்சோழர்: சோழநாட்டை ஆண்டுக்கொண்டிருக்கும் மன்னன்.

அருள்மொழிவர்மன்: சுந்தரச்சோழரின் இளம் புதல்வன், பிற்காலத்தில் ராஜ ராஜச் சோழன்

ஆதித்த கரிகாலன்: அருள்மொழிவர்மனின் அண்ணன்.

ஊமை ஸ்திரீ: மந்தாகினி - இவர் வரலாற்றைப் படிக்க, பொன்னியின் செல்வன் புத்தகத்தையே படிங்களேன், ப்ளீஸ்! இல்லையென்றால் சுவாரசியமாகவே இருக்காது!


இக்கதை ஒரு கற்பனை


ரவிதாசனும் சோமன் சாம்பவனும் அனுராதபுரத்தின் அருகில் இருந்த அடர்ந்தக்காட்டுப்பாதையில் விரைவாக ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஓடுவதைப் பார்த்தால் யாரோ துரத்துவது போல் தெரிந்தது. ஆமாம், அவர்கள் அந்த ஈழக் காட்டில் முன்னும் பின்னும் தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களை துரத்திக்கொண்டு படை வீரர்கள் மூவர், வேலும் வாள்களும்  கைகளில் பிடித்தவாறு ஆரவாரம் செய்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

"அடே சோமா.. இந்த சோழ வீரர்கள் மிக கொடுமைக்காரர்கள்.. எவ்வளவு விரைவாக ஓடினாலும், பின்னே வந்துவிடுகிரார்களே?", என்றான் ரவிதாசன்.

"மந்திரவாதி.. அவர்கள் கொடூரமானவர்கள் தான்.. அனால், இப்போது நாம் தப்பிக்கும் வழியை தேடுவோம்..அதோ, அந்த புதர் தெரிகிறதா? வாருங்கள் ஒளியலாம். இந்த முக்கில் திரும்பினால் அவர்களால் நம்மை பார்க்க இயலாது. சீக்கிரம்.. வாங்கள்..", என்றான் சோமன்.

குறுகிய பாதை ஒரு பாறையின் தருவாயில் திரும்பியது. அதற்க்கு எதிர்மாறான திசையில் ஒரு பெரும் புதர் காணப்பட்டது. அந்த்தக் காட்டில் நிறைய புதர்கள் இருந்ததால், இது தனித்து விளங்கவில்லை. ஆகையால் ஒளிவதற்கு இது ஒரு நல்ல இடம் என்றே நினைத்தான் சோமன்.

அனால் அதைக் கண்டவுடன் ரவிதாசனுக்கு சற்று பயம் உண்டாகிவிட்டது. இந்த புதரில் என்ன கொடும் ஜீவ ராசிகள் ஒளிந்திருக்குமோ என்று நினைத்து ஒரு நிமிடம் நடுங்கி நின்றான். இந்த திகைப்பை கவனித்த சோமன், ரவிதாசனை இழுத்துக் கொண்டு புதரில் தள்ளினான். அதிசயமாக அந்தப் புதரில் முள் செடி எதுவும் இல்லை.

"நல்ல யோகம், மெத்தை போலே இருக்கிறது அல்லவா?", என்றான் ரவிதாசன்.

"மந்திரவாதி, உம்!", என்று சோமன் தன் கையால் மந்திரவாதியின் வாயை மூடினான். 

சோமன் நினைத்தபடியே நடந்தது. வெறிகொண்ட சோழ வீரர்கள் இவர்கள் ஒளிந்திருந்த புதரின் எதிர் திசையை நோக்கி ஓடி விட்டார்கள். சிறிது நேரத்தில் மறைந்தே போனார்கள். இவ்வளவு அமைதியான காட்டை சோமன் தன் வாழ்நாளில் பார்த்ததில்லை. அனால், அந்த அமைதி நிலை நீடித்திருக்கவில்லை.

"சோமா.. நான் மந்திரவாதிதான்.. பாண்டிய நாட்டின் மிகச்சிறந்த மந்திரவாதி தான்.. அனால், நீ பெரும் புத்திசாலி..எல்லா இடத்திலும் பச்சை பசேலென்று இருக்கும் இக்காட்டில் ஒளிவதர்க்கான இடத்தை என்னால் தேட முடியவில்லையே? இவ்வளவு துல்லியமாக அபாயத்திலிருந்து என்னைக் காப்பாற்றினாய்! நீ வாழ்க, உன் குலம் வாழ்க! பா..", என்று மந்திரவாதி கூறுவதற்கு முன்னேயே சோமன் குறுக்கிட்டான்.  

"மந்திரவாதி..உளறுவதை நிறுத்துங்கள்! ஆறு தினம் நாம் எதுவும் உண்ணவே இல்லையே?.. அந்த பிரம்மையினால் இப்படி பிதற்றுகிறீர்கள்..", என்றான் சோமன்.  

"சரி தான்.. சோமா.. எனக்கு மிகவும் பசிக்கிறது.. நந்தினி தேவியின் சபதத்தை நிறைவேற்றவேண்டும் என்றால் நாம் உயிரோடு இருப்பது மிக முக்கியம். எங்கேயாவது உணவு கிடைக்குமா என்று பார்ப்போம்".

இருவரும் மெதுவாக அப்புதரிலிருந்து வெளியே வந்தார்கள். சோமன் எல்லா திசையிலும் பார்த்தான். சற்று தாங்கள் ஓடி வந்தப் பாதையிலிருந்து மேற்கு திசையை நோக்கி நடந்தார்கள். எல்லாத்திசையிலும் மரங்களால் மூடப்பட்டு காட்சி அளித்த காடு, இவர்கள் நடக்கையில் ஒரு குன்றை அடைந்தது. அங்கு மரங்கள் குறைவாக இருந்த காரணத்தால், சூரிய பகவான் நன்றாகவே காட்சி அளித்தார்.

"அப்பப்பா.. மதுரை வெய்யில் தான் சூடு என்று நினைத்தேன்.. ஈழம் வெய்யில் தாங்க முடிய வில்லை.."

"மந்திரவாதி.. பசி... அதுதான் பிரச்சனை..  எல்லாம் மங்கித் தெரிகிறது..."

"உண்மை சோமா. குடிக்க இருந்த தண்ணீர் கூட தீர்ந்துவிட்டதே! கொடுமை"

"நீங்கள் இங்கு சற்று அமருங்கள்", என்று சோமன் மந்திரவாதிக்கு ஒரு சிறு புல்ப்புதரைக் காண்பித்தான். மந்திரவாதி உடனே அமர்ந்து தனது இரு கைகளையும் தலை மீது வைத்துக்கொண்டு ஏதோ புலம்பிக்கொண்டிருந்தான். அப்புலம்பலை பொருட்படுத்தாமல் சோமன் இங்கும் அங்கும் எதாவது தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தான். 

"அங்கே பாருங்கள் மந்திரவாதி..ஒரு  யானை வருகிறதே.."

"யானைப்பாகனும் தெரிகிறான்..புதரு தேடவேண்டும் போலிருக்கிறதே?"

"அதெல்லாம் வேண்டாம் ரவிதாசரே. அவன் ஒருவன் தான். நாம் இருவர். பகைவனாய் இருந்தால் அழித்துவிடுவோம். அதற்கு பிறகு, யானையை பயன்படுத்திக்கொள்ளலாம். வேண்டும் என்றால், இந்த யானையை வைத்தே அருள்மொழிவர்மனை கொன்று விடலாம்", என்று சோமன் தன் கையில் சிறு கத்தியை மறைத்துக் கொண்டான்.

"அருள்மொழியார் யார்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏதோ செய் சோமா", என்றான் மந்திரவாதி.

சோமன் இந்த உளறலைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டான். யானை நெருங்கி விட்டது. யானைப் பாகன் யானையின் காதுக்கருகில் ஏதோ கூறினான். பத்தடிக்கப்பால் யானை நின்றது. அவன் கீழே இறங்கி கம்பீரமாக நடந்து வந்தான். பல வருட உழைப்பினால் அவன் தேகம் மெருகேறியிருந்தது என்று தோன்றியது. சோமன் எதற்கும் தயாராகத்தான் இருந்தான்.
கையில் தடியுடன், சடா முடியுடன், ஒரு சிறு புன்னகையுடன் அந்த யானைப்பாகன் வந்து நின்றான். ரவிதாசன் இப்போது எழுந்து நிற்க முயற்சி செய்துக்கொண்டிருந்தான். அனால் அவனால் முடியவில்லை. பரிதாபமான பார்வை யானைப்பாகனின் கம்பீரமான முகத்தில் தெரிந்தது.

அதை கவனித்த சோமன், "யானைப் பாகா.. யார் அப்பனே நீ?"

"அய்யா, என் பெயர் ஈழத்தாள்வான். இங்கே அனுராதபுரம் ஆஸ்தான யானைப் பாகன் நான் தான். இவருக்கு என்ன ஆனது? உடம்பு சரியாக இல்லையா? "

"நாங்கள் உணவு உண்டு ஆறு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. தண்ணீர் கூட குடிப்பதற்கு இல்லை. இந்த ஈழக்காட்டில் பேய் மாதிரி அலைந்துக்கொண்டிருக்கிறோம்", என்று சோகமான தொனியில் சோமன் கூறினான்.

"என்னே கொடுமை..நீங்கள் யார் என்று அடியேன் தெரிந்து கொள்ளலாமா? சற்றுமுன் உங்களை சோழ சூழ்ச்சமர்கள் துரதினார்களா?"

"ஈழா.. அது எப்படி உனக்கு தெரிந்தது? நீ யார்?", என்று கூறும்போது, சோமன் தன் கையில் இருந்த கத்தியை ஈழன் முகம் முன்பு நீட்டினான்.

ஈழனின் முகத்தில் பயத்திற்கான அறிகுறி தெரிந்தது. "அவசரப்பட்டுவிட்டோமோ?" என்று கூட சோமன் எண்ணினான்.

"என்னை ஒன்றும் செய்யாதீர்கள் அய்யா. யானை மேல் உட்கார்ந்து இந்த காட்டில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது தான் நீங்கள் ஓடுவதை கவனித்தேன். புதருக்குள் புகுந்ததையும் கவனித்தேன். இந்த சோழ படையினரால் உங்களுக்கு ஆபத்து என்று வந்தேன்."

"ஆஹா, சோழர்களுக்கு இங்கும் ஒரு பகைவனா? நான் உன்னை எப்படி நம்புவது?"

"அய்யா. சுந்தரச்சோழரின் சீடர்கள் இங்கு செய்யும் அக்கிரம்களை பார்க்கவில்லையா நீங்கள்? சரியா போச்சு போங்கள். எவ்வளவு புத்தர்சிலைகளை தரைமட்டம் ஆக்க்யிருக்கிரார்கள்! மூடர்கள். தாங்கள் நம்பவில்லை என்றால் சென்று வருகிறேன். என்னை விடுங்கள்."

"அடேயப்பா. என்ன துணிச்சல் அய்யா உனக்கு. நாங்கள் சோழ நாட்டு ஆட்களாக இருந்தால் என்ன செய்திருப்பாய்?", என்று கூறிக்கொண்டே ரவிதாசன் எப்படியோ எழுந்து நின்றான். 

"சாக்ஷாத் அருள்மொழிவர்மனே இங்கு வந்திருந்தால் இதைத் தான் சொல்லியிருப்பேன் ", என்றபோது சோமன் கத்தியை இறக்கி தனது இடுப்பில் பதுக்கிக்கொண்டான்.

ரவிதாசனும் சோமனும் சத்த்ம்  போட்டு சிரித்தார்கள். ரவிதாசன் ஈழனின் தோள் மீது கையைப் போட்டான். தன்னால் நிற்க முடியவில்லை, அதனால் ஈழனின் உதவியை நாடினான். சற்று ஆஜானுபாகுவாக தோற்றம் கொண்ட ரவிதாசன் யார் மீதாவது சாய்ந்தபடி நின்றால் உடல் பருமன் தாங்கமுடியாமல் கீழே விழுந்து விடுவார்கள். அனால் ஈழனின் ஒரு சதைக் கூட நகன்றவாறு தெரியவில்லை. கல் போன்றே நின்றான்.

"ஈழனே. நீ தான் உண்மையான வீரன். உன் கட்சியில் தான் நாங்கள் உள்ளோம். சுந்தரச்சோழரின் அக்கிரமங்களை கேள்வி கேட்கவே இங்கு அருள்மொழியாரை சந்திக்க வந்துள்ளோம். எங்களை உதவுவாயா?"

"நல்ல கேள்வி கேட்டீர்கள் அய்யா. உதவாமல் வேறு என்ன என்னால் செய்ய முடியும்? உங்களுக்கு இப்போது உணவு தேவை. வாருங்கள் என்னுடன்."

மூவரும் கஜேந்திரனை அணுகினார்கள். தலைகுனிந்து இருந்த கஜேந்திரன் மீது மூவரும் ஏரி அமர்ந்தார்கள். ஈழன் முன்பு போல் யானையிடம் ஏதோ கூறினான். கஜேந்திரன் விரைவாக நடந்தான்.

"ஈழா! மெதுவாகவே போ. சற்று பயமாக உள்ளது", என்றான் ரவிதாசன்.

"அய்யா. அருள்மொழியாரை சந்திக்க போகிறீர்கள் என்று சொல்லுகிறீர்கள், அனால் கஜேந்திரனை கண்டால் பயப்படுகிரீர்களே?"

"உனக்கு சற்று வாய் பேச்சு அதிகமாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு வைஷ்ணவன் உள்ளான் என்றால், இங்கு ஒரு ஈழத்தாள்வான். என்ன விந்தை! அவனைப்போல் நீயும் என்ன, சைவர்களுடன் சண்டை போடுவாயோ? ", என்று ரவிதாசன் கலீர் என்று சிரித்தான். மறுபடியும் சோமன் தன் தலையில் அடித்துக்கொண்டான். ஈழன் மௌனமாகவே இருந்தான்.

"என்ன அழகு வளம் மிகுந்த நாடு! உலகத்திலே மதுரை தான் சிறந்த இடம் என்று நினைத்தேன், அனால், ஈழம் வென்று விட்டது போல் தோன்றுகிறது", என்றான் ரவிதாசன்.

இவ்வளவு நேரம் பேசாமல் இருந்த ஈழன், "அய்யா, தாங்கள் பாண்டிய நாட்டவரா? மதுரையின் அழகைப்பற்றி சொல்லுங்களேன்?", என்றான்.

திடுக்கிட்ட சோமன், "இல்லை ஈழா, இந்த நேரத்தில் பாண்டிய நாடு என்றோ, சேர நாடு என்றோ எது உள்ளது? எல்லாம் இந்த சுந்தரச்சோழர் ஆட்சி தானே? மதுரையின் இயற்கையான அழகைப் பற்றி தான் மந்திரவாதி கூறுகிறார். நான் சொல்வது சரி தானே அய்யா?", என்று சாந்தமாகவே பேசினான்.

"ஆம்..ஆம்.. சோமா..சரி தான்.. என்ன விந்தை..", என்றான் மந்திரவாதி. தனது முட்டாள்தனத்தை நினைத்து தன்னையே திட்டிக்கொண்டான். இப்போது ஈழன் லேசாக சிரித்ததை யாரும் கவனிக்கவில்லை.

கஜேந்திரன் குன்றைத்தாண்டினான். அப்போது, எங்கிருந்தோ மாயம் செய்ததுப்போல் ஒரு மகா அருவி ஒன்று தெரிந்தது. ரவிதாசன் இதைக்கண்டு தெளிவு அடைந்துவிட்டான். பல நாட்களாக தண்ணீர் குடிக்காமல், உணவு உண்ணாமல் இருந்தவனுக்கு, இத்தண்ணீர் அற்புதத்தை, இயற்கையின் சீற்றத்தைப் பார்த்ததும் பூரிப்பாகிவிட்டது. சோமனுக்கும் இதே நினைப்பு உண்டாகிவிட்டது. அவனும் மனிதன் தானே பாவம்.

"அய்யா, அங்கு பாருங்கள். அந்த அருவி தெரிகிறதல்லவா? அங்கு தான் என் வீடு உள்ளது", என்றான் ஈழன்.

"என்னது, அருவி தான் வீடா? இப்போது யார் உளறுகிறார்கள் என்று சொல்லு சோமா?", என்று நகைத்தான் ரவிதாசன்.

"ஆமாம் அய்யா. அது தான் என் வீடு. குகை வீடு. கஜேந்திரா.. நில்லு இங்கே", என்று கர்ஜித்தான் ஈழன்.

மூவரும் கீழே இறங்கினார்கள். ஈழன், இருவரின் கையை பிடித்துக்கொண்டு பாறைகள் மீது மெதுவாக அழைத்துச் சென்றான். சூரிய பகவான் சுட்டெரிக்கும் இடத்தில் குளிர்ந்த நீர் சாரல் பாறைகளை ஈரமாக்கிக் கொண்டிருந்தது. அந்தப் பாறைகள் மீது கால்கள் பட்டதும் ரவிதாசனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.குகைவீட்டிர்க்குள் புகுந்தார்கள்.

அதிசயமான அந்த மகா அருவியின் நீர் வீழ்ச்சியின் வலதுபுரத்திர்க்கு ஈழன் இவர்களை அழைத்துச் சென்றான். அங்கு ஒரு சிறு குகை தெரிந்தைக்கண்டு ரவிதாசனும் சோமனும் மெச்சிப் போனார்கள். என்ன அழகாக இருந்தது அந்த குகை. குகைக்குள் பிரவேசித்ததும் ஈழன் ஒரு புல் படுக்கையை விரித்தான். இருவரும் அமர்ந்தார்கள். மிகவும் குளுமையாக இருந்தது அந்த குகை. குகை சுவற்றிலே இருந்த சித்திரங்கள் மிக அழகாகவும் துல்லியமாகவும் செய்யப்பட்டதாகத் தெரிந்தது.

"பாண்டிய நாடு தோற்றது!", என்றே நினைத்தான் ரவிதாசன். இந்த முறை வெளியே சொல்லவில்லை!

"இங்கே  இருங்கள் அய்யா. நான் போய் என் அன்னையிடம்  உணவு வாங்கி வருகிறேன்"

"ஆகட்டும். சீக்கிரம் வா. பசிக்கிறது", என்றான் ரவிதாசன்.

சற்று உள்ளே சென்ற ஈழன் ஒரு முதுமைபிராட்டியிடம் கையால் செய்கைகள் செய்துக்கொண்டிருந்தான்.

"மந்திரவாதி. அதோ பாருங்கள். அந்த கிழவியை எங்கோ பார்த்த மாதிரி இல்லை?"

"அப்படி தோன்றவில்லை சோமா. முழுசாகவும் பார்க்க முடியவில்லை. அவர் பின்புறம் தானே தெரிகிறது? முழுசாக வந்து நின்னாலும் பசி மறைத்துவிடும் போலிருக்கிறது"

"இல்லை மந்திரவாதி. கண்டிப்பாக பார்த்திருக்கிறேன். இந்த சித்திரங்களைப் பாருங்கள். ஏதோ மர்மம் உள்ளது என்று என் உள் மனது கூறுகிறது"

அப்போது ஈழன் இரண்டு வாழை இலைகளுடன் வந்தான். இலைகளை கீழே வைத்து அதில் புளி சோற்றை கொட்டினான்.

"இந்தாங்கள் அய்யா.  கொஞ்சம் புளி சோறு தான் உள்ளது. மன்னிக்கவும்"

வெறிகொண்ட புலி தன் இறையை தின்பது போல் ரவிதாசனும் சோமனும் புளி சோற்றை புசிக்க ஆரம்பித்தார்கள். அவசரமாக சாப்பிட்டதால் சோமன் விக்கல் எடுக்க ஆரம்பித்தான். இதை கவனித்த ஈழன் அங்கு உள்ள மண் பானையை அணுகி தூக்கிப்பார்த்தான். அதில் தண்ணீர் ஒன்றும் இல்லை.

"தேன் நீர் முடிந்ததே! சற்று பொறுங்கள், கொண்டு வருகிறேன்", என்றான் ஈழன்.

"பொறு ஈழா. எங்கே போகிறாய்? இந்த அருவியில் இல்லாத தண்ணீரா?", என்றான் ரவிதாசன்.

"சரிதான் அய்யா. அருவியில் தண்ணீர் நிறைவாக உள்ளது சரிதான். ஆனால், அருவியின் உச்சியில் தான் தேன் நீர் உள்ளது. அதைக்குடித்தால் தான் விக்கல் நிற்கும்", என்றான் ஈழன்.

"அது என்ன அப்பா தேன் நீர்? அதை விடு. சோமன் விக்கி சாகமாட்டான். சற்று முன் உள்ளே உன் அன்னை இருக்கிறாள் என்று கூறினாயே, எங்கு போய்விட்டார்? நாங்கள் பார்க்கக் கூடாதா?", என்றான் ரவிதாசன்.

"கண்டிப்பாக பார்க்கலாம் அய்யா. ஆனால், அவருக்கு வாய் பேச முடியாது, காதும் கேட்காது"

"என்ன கொடுமை. அதனால் என்னப்பா? எங்கே போனார்கள்?"

"அய்யா அவருக்கு கூச்ச ஸ்வபாவம். அதனால் தான் பழங்களை பறிக்க சென்றுவிட்டார்"

"குகையின் பின்புறமாகவே வா?"

"ஆமாம். இந்த குகை அறையிலிருந்து காட்டிற்கு செல்லும் பாதை உள்ளது. அதன் வழி தான் சென்றார். நான் அழைத்துச் செல்கிறேன். முதலில் உணவு உண்ணுங்கள்"

"அப்படியா. விடு அப்பறம் பார்த்துக்கொள்கிறேன்."

அப்போது ஈழன் உள்ளே சென்று இரண்டு துணி மூட்டைகளை எடுத்து வந்தான். எங்கேயோ செல்வதற்காக ஆயத்தமாக இருந்தான்.

"அய்யா. இதை அடுத்த முறை பசிக்கும் போது சாப்பிடுங்கள்"

"உன் உதவிக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம்? சோமா, அந்த தங்க மோதிரத்தை எடு", என்று ஒரு தங்க மோதிரத்தை ஈழநிடம் கொடுத்தான். சோமனுக்கு விக்கல் இன்னும் நிற்கவில்லை.

"ஆஹா. என்ன அழகான மோதிரம். இது என்ன பழுவூர் முத்திரையா?"

"மிக கெட்டிக்காரன் நீ. பழுவூர் முத்திரையே தான். எப்படி தெரிந்தது?"

"நந்தினி தேவி எனக்கு கடவுள். ஈழன் என்று அவரிடம் கூறிப்பாருங்கள். நன்கு அறிவார் என்னை"

"ஈழா. பழுவூர் ராணிக்கு உன்னை தெரியுமா? ஆஹா. என்ன நல்ல விஷயம்!"

"இப்போது தாங்கள் எங்கு செல்வதாக உத்தேசம்? வெய்யில் கொளுத்துகிறது. சற்று ஓய்வு எடுக்கவேண்டியது தானே? நானும் போய் தேன் நீர் நிரப்பிக்கொண்டு வருகிறேன்."

"நீ சொல்வதும் சரி. அருள்மொழியாரிடம் ஒரு மிக முக்கியமான சம்பாஷனை உள்ளது. இன்று இரவே செய்தாக வேண்டும்."

"அப்படியா? அப்போது நீங்கள் நன்கு ஓய்வெடுக்க வேண்டும். நான் போய் தேன் நீர் கொண்டு வருகிறேன். அது வரையில் தூங்குங்கள்."

"ஈழா. உன்னை பார்த்தால் மிகவும் வியப்பாக உள்ளது. அப்படியே ஆகட்டும். சென்று வா", என்றான் ரவிதாசன்.

ஈழன் குகை வாசலுக்குச் சென்றான். திரும்பிப்பார்த்து லேசாக சிரித்தான். இந்த முறை மந்திரவாதி அந்தச் சிரிப்பை கவனித்து விட்டான். ரவிதாசன் அவனை உற்றுப்பார்த்தான். அந்த காந்தக்கண்கள், சடாமுடி, நெரித்தப்புருவங்கள், வலிமையான தோள்கள், எங்கோ இவனைப்பார்த்த ஞாபகம் ரவிதாசனுக்கு வந்தது. ஏதோ மர்மம் இருக்கிறதென்ற நம்பிக்கை உறுதியானது. .

"ஈழனே.. நில். உன்னை எங்கேயோப் பார்த்தது போல் உள்ளதே? யார் நீ? "

லேசான சிரிப்பு கர்ஜனையாக மாறியது.

"ஏன் இப்படி சிரிக்கிறாய்?", என்றான் ரவிதாசன்.

"அய்யா, என்னை ஈழத்தாள்வான் என்று இங்குள்ள மக்கள் அன்பாக கூப்பிடுகிறார்கள்.  எனக்கு இன்னொரு பெயரும் உள்ளது. சீக்கிரம் அதை அறிவீர்கள்", என்று கூறியபடியே கஜேந்திரனிடம் விரைவாகச் சென்று ஏறிக்கொண்டான்.

சோமன் விக்கலுடனே வெடுக்கென்று எழுந்து குகையின் வெளியே வந்தான். எவ்வளவு வேகமாக ஈழன் ஓடியிருக்கவேண்டும்? சோமன் குகையின் வாசலிற்கு வருவதற்கு முன்னமே ஈழன் யானை மீது எரிக்கொண்டிருந்தான். இன்னும் ஒருமுறை இவர்களைப் பார்த்துவிட்டு யானையின் காதில் ஏதோக் கூறினான்.  கஜேந்திரன் மரணபயம் வந்ததுப்போல விரைந்து காட்டிற்குள் ஓடிவிட்டான். ஈழன் காட்டிற்குள் மறைந்தான்.

"மந்திரவாதி! நான் சந்தேகித்தது சரிதான். அங்கு பாருங்கள். பழுவூர் ராணியைப்போல் உருவம் கொண்ட ஸ்திரீ! அப்பா! என்ன விரைவாக ஓடுகிறாள்! ஈழனும் மறைந்து விட்டான். நாம் உண்ட உணவில் விஷம் இருக்கிறதா என்று பாருங்கள்..சீக்கிரம்.."

"சோமா! இல்லையே.. நல்ல சுவையாகத்தான் உள்ளது!!  இவ்வளவு நேரம் நாம் பேசிக்கொண்டிருந்தது.....?"

"சந்தேகமே இல்லை. அருள்மொழிவர்மர் தான்"

ரவிதாசனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பீதியின் காரணமாக புளி சோறு ரவிதாசனின் தொண்டையை அடைத்தது. அது நஞ்சினால் உண்டானது என்று பயந்துப் போனான்.

அதே நேரம் சோமன், "ஆனால் மந்திரவாதி, என் விக்கல் நின்றுவிட்டது!", என்று கூறி லேசாக சிரித்தான்.   

அருள்மொழியார் நஞ்சு கொடுத்து பகைவர்களை கொல்லும் வீரர் கிடையாது என்பதை உணர சற்று நேரம் ஆனது.

ஞாயிறு, 4 மார்ச், 2012

ரிச் கெட் ரிச்சர்..புவர் கெட் புவரர்..

"டேய் ரங்கா... யார் கிட்டேந்து திருடலாம்?", ஒரு சிறிய அறையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ரங்காவும் ராஜனும் எம்.சீ குவாட்டர் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

"இப்டி கேட்டா நான் என்ன சொல்றது டா? திருட நெனைக்க ஆரம்பிச்சுட்டோம், கஷ்ட காலம் மச்சி.."

"இதுல என்ன டா அவமானம். ஒலகத்துல யாரு திருடரதில்லை?"

"லாஜிக்ல அட்டாக் பண்ணிட்ட. மேல சொல்லு"

"நீ சீரியஸ் நா சொல்லு, நான் மேல பேசறேன்"

"சும்மா சொல்லு டா. ஒரு ரவுண்டு போடு, இந்தா", மடக் மடக்கென்று இரண்டு பேரும் அடித்தார்கள். அடித்தவுடன் பிளாஸ்டிக் பாக்கெட்டிலிருந்த ஊறுகாயை சுவைத்துக்கொண்டார்கள்.

"இதோ பாரு டா. நீயும் சரி, நானும் சரி, நல்லாதானே படிச்சோம்? கவர்மண்டு காலேஜ்ல பைசா குடுக்காம இஞ்சினீரிங் முடிச்சாச்சு. ஐ.டி கம்பனி கூட வேலை குடுத்தான். ரெண்டு பெரும் ஒர்ரே ஆபீஸ்ல தான் வேலை செஞ்சோம். என்ன மயித்த கண்டோம் அதுல?"

"ரைட்டு, ரைட்டு.. டன்சன் ஆவாதே டா. எமோஷன கட் பண்ணு"

இன்னொரு ரவுண்டு  உள்ளே போனது.

"ஆபீஸ் மொக்க இல்ல? வேலையாடா அது? ஏதோ ஒரு வெள்ளைக்காரனோட கடைல சிஸ்டம் வேலை செய்யலேன்னா, எஸ் சார், நோ சார், பக் பிக்ஸ் ரெடி சார்ன்னு மொக்க போடணும். அதுக்கு ஒரு மேனேஜர் வேற. ஒக்காளி. மேல என்ன நடக்குதுன்னே தெரியலை, வந்து ஆர்டர் போடுவான்"

"அதுனாலத் தானே வேலைய விட்டோம். அதாவது, பைசாக்குதான் மச்சி வால்யூ"

"கம்பனி பாலிடிக்ஸ் ஒரு பக்கம் டா. கூட வேல பாக்கறவங்க அலப்பறை தாங்க முடியல மச்சி. பேப்பர்ல இருக்கறத பாத்து பிரோக்ராம் தட்டரவனுக்கு எதுக்கு வெட்டி பந்தா? இதுல பொண்ணுங்க வேற. அவங்க வுடற சீன் தாங்க முடியல. ஏதோ அவங்கள சுத்தி தான் ஒலகமே ஓடுதுன்னு நெனப்பு வேற. நார்த் இந்தியால தான் இதெல்லாம் நடக்குதுன்னா, நம்ப ஊருலயும் இந்த கருமம்"

"டேய்..கற்றது தமிழ் டயலாக திருப்பி சொல்றயா? புதுசா சொல்லு டா"

இன்னொரு ரவுண்டு போனது.

"அணத்த விட்ரா. காசு அதிகமா இருந்தாலே ஒருத்தனையும் மதிகரதில்லை மச்சி. சாப்ட்வேர் வேலைய வுட்டுட்டு கட்டட வேலை செஞ்சோம். காசு கொஞ்சம் வந்தாலும் நம்மளால ஏதோ சந்தோசமா இருக்க முடியுது. நம்ம கூட வேலை பாக்கறவங்கள பாரு டா. என்ன பாத்ருகாங்க வாழ்க்கைல? அவங்க முன்னாடி சீன் வுட்டா அவங்க கடுப்பு ஆவாங்களா மாட்டாங்களா? அதான் திருடலாம்ன்னு சொல்றேன். இப்போ சொல்லு, யார் கிட்ட திருடலாம்?"

"ஹீ ஹீ.. மொதல்ல நாம இருக்கற சோசியல் டிவிஷனப்பத்தி சொல்லு பாப்போம்?"

"ஒ கே.. மொதல்ல சூப்பர் சொசைட்டி...பரம்பரை பணக்காரன்.. அவன லூசுல விடு.. புதுப் பணக்காரண புடி... நமக்குத் தெரிஞ்சே நூறு பேராவது இருப்பாங்க. அவங்கள தூக்குவோம் மச்சி"

"எப்டி தூகப்போறோம்? என்னத்த தூகப்போறோம்? நீ பைசா சுருட்டினாலும் இந்த மக்கள் வாங்கிப்பாங்களா?"

"கஷ்டம் தான். பட் என்ன பண்றது. கவர்மன்ட் செய்ய வேண்டிய வேலைய நம்ம செய்ய பாக்கறோம்"

"கவர்மன்ட் மேல இருந்த நம்பிக்கைலாம் எப்போவோ பறந்து போயாச்சு"

"செரியா சொன்ன. இன்னொரு ரவுண்டு ஊத்து"

"ஒன்னும் இல்ல ஊத்த. இந்தா, பீடி அடி", ரங்கா பீடியை கொளுத்தி ராஜனிடம் கொடுத்தான்.

"ரெண்டு பேறும் குடும்பங்கள எதித்துகிட்டு வெளில்ல வந்தாச்சு. அப்பன் மாமான்னு ஒரு உறவும் கடயாது. இத விட்டா வேற சான்ஸ் இல்லே டா. ரிஸ்க் எடுப்போமடா"

"ரிஸ்க்கு வந்து நமக்கு ரஸ்க்கு சாப்ட்ரா மாதிரி"

"பஞ்ச். தலைவர் பாபால்ல சொன்ன வசனம் தான் ஞாபகம் வருது டா. 'அப்பன் மாமா சித்தப்பா அத்தைன்னு உறவுல வேகரதோட, ரெண்டு கட்டு வெரகுல வெந்துட்டு போய்டலாம்'..என்ன டயலாக்!"

"ஒனக்கு ஏறிப் போச்சு ராஜா.. படுத்து தூங்கு, நாளைக்கு லோடு வந்துரும்"

"அது வரட்டும்டா...எவனா இருந்தாலும் வெட்டுவேன். நாளைக்கு பாரு.. சும்மா டக்குன்னு எழுந்திருப்பேன் பாரு"

"இந்த மாதிரி பஞ்ச் பேசியே நாசமா போறோம் டா நம்ம. ஒண்ணுத்தையும் மாத்த முடியாது நம்பளால"

"பாப்போமடா.."

"இல்லே இத சொல்லு நீ...யாருக்கூட நம்பள்ளுக்கு பிரச்சனையே இல்லேன்னு சொல்லு பாப்போம்? அவன் சம்பாதிக்கறான், அவன் ஏதோ சீன் விடறான். நம்ப எதுக்கு கண்டுக்கணும்? வுட்டு தள்ளு"

"டேய் ரங்கா, கடுப்பாகுது டா.."

"லூசுல விடு...நாளைக்கு பேசிக்கலாம்...இப்போ படு.."

ஒரு வழியாக இரண்டு பேரும் தூங்கி விட்டார்கள். காலையில் ராஜன் எழுந்தான், காலை ஆறு மணிக்கு. ரங்கன் இன்னும் தூங்கிக்கொண்டுதான் இருந்தான். தலை வலித்துக்கொண்டிருந்தது. இரண்டு டம்பளர் தண்ணீரைக் குடித்தான். 

"டேய் ரங்கா..எந்திரி டா.. மாணிக்கம் அண்ணே வந்துடுவாரு..."

ரங்கன் சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்தான். 

"என்ன ராஜா...நேத்து பேசினது எதாவது ஞாபகம் இருக்கா?"

"அப் கோர்ஸ்.. நமக்கு தேவை பைசா தானே.. அது எங்க பொழங்கிட்டிருக்குன்னு எனக்கு தெரியும். பைசா கைல வந்தா நாம நல்லது செய்யலாம்"

"எங்கேர்ந்து டா பைசா வரும்? இருந்த நல்ல வேலையும் வுட்டாச்சு.. இப்போ செங்கல் தூக்கிற்றுக்கோம். என்னத்த செய்ய?"

"நீ பீல் பண்ணாதே.. இந்த மாசம் மிச்ச சம்பளத்த வாங்கி இன்டர்நெட் செனட்டர் போவோம் வா"

"என்ன டா சொல்ற?"

"வா டா.. பார்கிளேஸ் பாங்கு ரெண்டு ஐ டி ஆளுங்கள தேடறாங்களாம். எக்சல் ஷீட்டு எடிட் பண்ண மாசம் ஒரு லட்சம் தராங்களாம். HR ஆளு நம்ப மகேஷ் தான். வேலை கடச்சா மாதிரி தான்"

"சரி டா.. பட் பாங்க்ல வேலை செஞ்சு நல்லது எப்படி செய்றது?"

"முட்டாள்...Investment பாங்க்ல எல்லாமே திருட்டு பணம் தான் டா..சூதாடி சுழண்ட பணம்.. அதுலேர்ந்து திருடரதுல தப்பு இல்லையே? வா திருடலாம்"

"ரங்கநாதா...காப்பாத்து.."

ஐந்து வருடங்கள் கழித்து...

தொலைப்பேசி அடித்தது. ரங்கா அதை எடுத்தான்.  

"ஹல்லோ..ரங்கநாதன் ஹியர், ஹூ இஸ் திஸ்?"

"டேய் ரங்கா, நான் ராஜ் டா..ராஜா"

"ராஜா... எப்டி டா இருக்க? வேர் தி ஹெல் ஆர் யு?"

"Deutsche Bank சிங்காப்பூர். AVP. நீ சிங்கபூருல இருக்கேன்னு என் Barcap எக்ஸ் கலீக் சொன்னான், தீபன் டா"

"ஒ, எஸ் எஸ்.. பிசினெஸ் ட்ரிப்"

"சூப்பர். லெட் அஸ் மீட் டுடே ஈவேனிங் மான்.. ஐ காட் எ ஹியூஜ் போனஸ், யு நோ? ஒரு பென்ட்லி கார் வாங்கிட்டேன் மான்.."

"ஆஸம்..எவ்ளோ டா?"

"முப்பது மில்லியன் டா.."

"ரியல்லி? சூப்பர்.. ஹ ஹ ஹா..", ரங்கன் சிரித்தான்.

"ஏன் டா சிரிக்கற?"

"ஒன்னும் இல்ல, பழஸ்ஸ நெனச்சேன்..விடு.. சிட்டி ஹால் Brotzeit அட் 6 "

"சுவர்.. சி யு தேர்..பாய் டா.."

ரங்கன் என்கிற ரங்கநாத சேஷாத்ரி தொலைப்பேசியை கீழே வைத்தான். ஆறு மணிக்கு அவன் நெருங்கிய நண்பனான ராஜாமணி அய்யரை சந்திக்கப்போவதை நினைத்து சந்தோஷப்பட்டான்.