திங்கள், 6 பிப்ரவரி, 2012

கொன்னாப் பாவம், தின்னாப் போச்சு..

எதுக்கு கொல்லவேண்டும்? எதுக்கு திங்கவேண்டும்? மாமிசம் சாப்பிட்டால் கர்ம மதிப்பெண்கள் எத்தனை? மனிதச்ச்சங்கிலியின் இயல்பான விஷயம் தானே மாமிசம் உண்ணுதல்? அல்லது செடி கொடிகளைத் தின்றால்த்தான் வாழ்வு மேன்மைப்படுமா? இது எல்லோருக்கும் தெரிந்தும் தெரியாமல் இருக்கும் ஒரு அறியாமைநிலை சங்கடம்.

தெரிந்தே நாம் எதற்க்காக ஒரு உயிரைக்கொன்று திங்க வேண்டும்? இது சைவர்களின் வாதம். அப்படிஎன்றால் செடிகளுக்கு உயிர் இல்லையா? ஐந்தறிவு இல்லாத காரணத்தினால் அது உயிர் பலி ஆகாதா? என்ன ஒரு குழப்பம்!

காலங்காலமாக இந்த நிலைமை ஆராயப்பட்டும், சண்டைப்போடப்பட்டும் வளர்ந்திருக்கிறது. கொழுந்து விட்டெரியவில்லை, தற்காலிகமாக மறைந்துக்கொண்டு ஒளிந்திருக்கிறது. கேள்வி கேட்கும் திறனை மனிதன் இழந்துக்கொண்டிருப்பதனால் இம்மாதிரியான எண்ணங்கள் மறைந்துக்கொண்டிருக்கின்றன. ஒரு விதத்தில் இது நல்லதுதான். "எவரைப்பற்றியும் யாரும் எந்நேரத்திலும் கவலைப்படத்தேவையில்லை" என்ற நோக்கத்தில் வாழ்க்கை வளைந்துக்கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன். இந்த வேகத்தின் பொருட்டு இவ்வாறான யோசனைகள் வந்தாலும், "எதற்கு நேரத்தை வீணடிக்கவேண்டும்" என்ற எண்ணம் வந்துவிடுகிறது. விடுங்கள்.

பிராமணர்கள் மாமிசம் சாபிடுவதில்லை, அது அந்தக் காலம். நான் கூறுவது இந்தக்காலம். சிக்கன் புல் மீல்ஸ் கட்டும் பிராமணர்களில் நானும் ஒருவன். இதில் பெருமைப்பீதிக்கொள்ள எதுவும் இல்லை. நன்றாக இருக்கிறது, தின்கிறேன். இதை வெளிப்படையாக சில பார்பனர்களிடம் பேசினால், அவர்கள் கூறும் சில மொழிகள்:

"நீயெல்லாம் பிராமணனா?" - என் கல்லூரி நண்பன் என்னிடம் கேட்டது.
"இல்லை. உண்மையான பிராமணன் யாரென்று தெரியாது, நீயும் கிடையாது" - என்னுடைய பதில்.

"இதெல்லாம் எல்லார்கிட்டேயும் சொல்லிண்டிருக்கதே" - என் அன்னை கூறியது.
"விடும்மா" - என் பதில்.

"இவனுக்கு சனி பிடிச்சிருக்கு. அதான் இதெல்லாம் தைரியமா செய்யறான்" - ஒண்ணு விட்ட சொந்தக்காரரின் வார்த்தை.
"சனி பகவான் என் நண்பன்" - மனதிற்க்குள் நானே எண்ணிக்கொண்டது.

"இப்போல்லாம் இதெல்லாம் சாதாரணம். சாப்டறதோ சாப்டர. அதுக்கப்றம் குளிச்சுட்டு காயத்ரி மந்திரம் சொல்லிடு, பாவம் ஒட்டிக்காது" - ஒண்ணு விட்ட ரெண்டு விட்ட உறவினர் கூறியவை.
"என்ன கொடுமை சரவணா" - வானதைப்பர்த்து நான் கூறியது.

இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம். எதிர்ப்புகளை நேராக தெரிவித்தவர்கள் மிகவும் சிலர். கவலைக்கிடமில்லை. சந்தோசம். நான் சிறு வயதிலிருந்தே அசைவ சாப்பாட்டை விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டேன். சுவை நன்றாக இருந்தது, மேலும், ஒரு சிக்கன் துண்டை தின்பதில் ஒரு சுவாரசியம் இருந்தது. இட் வாஸ் ஏ சாலஞ். முதல் முறை சாப்பிட்டப்போதே வீட்டில் கூறிவிட்டேன். என்ப்பெற்றோர் விரிந்த மனப்பக்குவம் உடையவர்கள். "ஏன் சாப்டர?" என்று கேட்டார்கள். "பிடித்திருக்கிறது" என்றேன். "என்ஜாய், பட், பாட்டி தாத்தாட்ட சொல்லாதே" என்றார்கள். அதன் படியே நடந்தேன். இது என் கதை. இப்படியே ஓடிக்கொண்டிருக்கிறது, இன்று வரை.

சாந்தமாக செல்கிறது வாழ்க்கை என்று நினைக்கும் போது, சில மனிதர்கள் குழப்பி விடுகிறார்கள். என் மாமா கூறியவை:

"நானும் உன்ன மாதிரி எல்லாம் சாப்டுண்டுதான் இருந்தேன் டா. இப்போ எல்லாம் சாப்ட்டுக்கோ. ஆனா ஒண்ணு மட்டும் மறக்காதே. நான் நெரிய பட்ருக்கேன் வாழ்க்கைல. மத்தவன் அனுபவத்துல படிக்கறவன் புத்திசாலி; தன்னோட அனுபவத்துல படிக்கறவன் கொஞ்சம் முட்டாள்; பட்டும் படிக்காதவன் அதி முட்டாள்" என்று கூறிச்சென்றார். கியூரியாசிடியின் காரணமாக நான் கொஞ்சம் முட்டாள் ஆகிறேன். பரவாயில்லை.

முக்கால்வாசி உண்மை / பொய் ஞானிகள், வாழ்க்கையில் எல்லா விஷயங்களை செய்து முடித்தப்பிறகு ஞானம் பெறுகிறார்கள் அல்லவா? அது ஞாயமா? அப்படி சில விஷயங்களை உணர்கிறவர்கள் ஞானிகளா? "அர்த்தமுள்ள இந்துமதம்" என்றப் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் என்ன கூறுகிறார் என்றால்:

"நாளையைப்பற்றி நினைக்காதே, நேற்று நடந்ததை மறந்துவிடு. வருபவை எதுவாயினும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்." - இப்படி வாழ்பவர் வெறும் மனிதரா இல்லை ஞானியா? சற்று உள்நோக்கிப்பார்த்தால், ஞானி கூட இதைதான் செய்ய முற்படுகிறார் இல்லையா? அப்போது யார் ஞானி, யார் மனிதன்? இந்தக்கேள்விக்கு விடைக்கிடைத்துவிட்டால், "கொன்னாப்பாவம் தின்னாப்போச்சு" என்பதற்கு விடைக்கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன்.

இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட விதிகள் இருந்தது என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். கூறியவர்கள் எல்லோரும் பித்துபிடித்தவர்கள் ஆக முடியாது. ஏதோ ஒரு மிஸ்ஸிங் லிங்க் இருக்கிறது என்று தோன்றுகிறது. அதை நாம் தொலைத்திருக்கக்கூடும். தெரியவில்லை.

"இறைவன் இருக்கானா இல்லையா?" என்ற கேள்வியை விட, "யார் ஞானி, யார் மனிதன்?" என்ற கேள்விக்கு ஆயிரத்திற்கும் மேல் பதில்கள் உள்ளன. அந்த ஆயிரத்தில் ஒரு பதில் கூடவா சரியான பதில் இல்லை?

அவரவருக்கு ஏற்றவாறு ஏதோ ஒரு பதிலை எடுத்துக்கொண்டு அதான் உண்மை என்று அலைந்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் பலர். சில நபர்கள் அதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. சிலர், அதை நினைத்துக்கொண்டு குழம்பி நேரத்தை வீணடிக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன்.

இந்தக்கேள்விக்கு பைனரி பதில் கிடையாது என்றால் மக்கள், ஞானிகள், கடவுள் (அப்படி இருந்தால்) எல்லோரும் குழம்பியவர்கள் ஆகிவிடுவார்கள் அல்லவா?

தெளிவானவன் தெளிவான விடையை என்றும் அளிப்பான். இல்லாவிடில் அவனிடம் காண்பது தெளிவல்ல, ஞானம் அல்ல. வெறும் அறியாமை.

இதுவரை நான் செய்வது:

"நான் கொல்லமாட்டேன். திம்பேன், சிலபொழுது சுவைக்காக, சிலபொழுது வயிறை நிரப்ப!"

இதை இப்படி மாற்றினால் தத்துவம் ஆகிவிடுமோ?

"நான் கொல்லமாட்டேன். திம்பேன்!
வயிறை நிரப்ப!"

அப்படியென்றால், வெகு விரைவில் நான் ஒரு ஞானி.

2 கருத்துகள்: