காட்சி 1
இடம்: உள்துறை அமைச்சர் அரங்கசாமி இல்லத்தில் உள்ள வாசல் சுவரு
நேரம்: காலை ஒன்பது மணி நேரம்
கதாபாத்திரங்கள்: மூன்று பிச்சைகாரர்கள் (படபிடிப்பில் வருபவர்கள்)
படப்பிடிப்பில் வராத கதாபாத்திரங்கள்: கட்சி தொண்டன், போலீஸ் கமிஷனர், வட்டச்செயலாளர்,
அமைச் சர் அரங்கசாமி, மற்ற கட்சி தொண்டர்கள் மற்றும் வேலைக்காரர்கள்
படப்பிடிப்பில் வராத காட்சி
ஒரு டாட்டா சுமோ வேகமாக அமைச்சரின் வீட்டு வாசலின் முன்னால் வந்து நின்றது. பட படவென காரின் கதவுகள் திறந்து மூடின.வண்டியிலிருந்து இறங்கினான் வட்டச்செயலாளர்
ஈ.ரா.ரா. பக்கத்தில் இறங்கினான் பாளையங்கோட்டை சேகர்.
ஈ.ரா.ரா. : ஏல, அய்யா கிட்ட எதுவும் ஒழுங்கா சொல்லண்ணும், இல்லாட்டி தாறு மாறு ஆக்கிபுடுவாறு, என்ன நான் சொல்லறது ?! மறுபடியும் சொல்றேன், விஷயத்த சரியா சொல்லலேன்னா காண்டு ஆயிடுவாரு, என்ன நான் சொல்றது?!
சேகர்: நீங்க பேசறது பாளையங்கோட்டை சேகர் கிட்ட தல.... நான் ஊருக்குள்ள கால எடுத்து வெச்சா , அவன் அவன் நாச்சரதுக்கு போய் ஒளிஞ்சுக்குவான்... அய்யாவ கேவலமா பேசினவன வல்ல நாட்டு மலை பக்கம் போட்டுடறேன்...
ஈ.ரா.ரா. : அடக்கி வாசி ஏல கூறுகெட்ட மூதேவி.... (மற்றொரு கட்சி தொண்டன் வருகிறான்...அவனை பார்த்து) அப்பு....எப்படி இருக்க? என்ன சங்கத்து பக்கமே ஆள காணோம்? பிரியாணி போடலேன்னா வரமாட்டியோ?
தொண்டன்: தலைவா... அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை... என் பொண்டாடிக்கி போன வாரம் தான் பிரசவம் ஆச்சு...அதான் வர முடியலை...எழவு, போட்ட புள்ள பொறந்துடுச்சு...
ஈ.ரா.ரா. : சாமி... பொட்ட புள்ளைங்கதான் இந்த காலத்துல வாழ முடியும்...ஆம்புளைங்களுக்கு இந்த காலத்துல மதிப்பே இல்லை...எல்லாம் இந்த பொட்டை கழுதைங்களுக்குதான்....சரி சரி....அய்யா இருக்காரா?
தொண்டன்: இப்போ தான் முதலமைச்சர பாத்துட்டு வந்தாரு... தலைவா உள்ள போங்க நீங்க....
ஈ.ரா.ரா.: நல்லதா போச்சு... போய் சோலிய முடிச்சுட்டு வரேன்...
தொண்டன்: சரி தலைவா....
வாசலில் மூன்று போலீஸ் ஜீப்புகள் வந்து நின்றன. கமிஷனர் மூர்த்தி இறங்கினார்.
அரங்கசாமி: வா வா கமிஷ்னறு... சோலி எல்லாம் எப்படி?
மூர்த்தி: ஏதோ தேவர் அய்யா புண்ணியத்துல போய்ட்ருக்கு... (நக்கலாக சிரித்தான் மூர்த்தி)
அரங்கசாமி: இந்த கோயம்பத்தூர் குசும்பு இன்னும் ஒன்ன விட்டு போகலேன்னு நெனக்கறேன்... (சிரிக்கிறார்கள்)
மூர்த்தி: என்ன விஷயம்? பட்டறைல எதாவது சமாச்சாரமா?
ஈ.ரா.ரா.: ஏல மூர்த்தி... சாமி அய்யாவ அந்த பாழா போனவன் போன அசம்பளி மீட்டிங்குல அசிங்கபடுதிட்டான்... தெரியும் னு நெனக்கறேன்...அவன போட்டு தள்ளனும்..சேகர் வந்திருக்கான்...பொட்டு வெக்கணும் சீக்கிரம்...
மூர்த்தி: அவ்வளோ தானே? பெருசா ராமசாமி நாயக்கற போடற மாதிரி சொல்லுறீங்க? முடிச்சிடலாம் கவலைய விடுங்க...
அரங்கசாமி: (சிரித்துக்கொண்டே.. ) இத பத்தி அப்புறம் பேசுவோம்... அம்மணி... நம்ம ஆளுங்களுக்கு காபி கொண்டு வா... அப்படியே ரமணா கிட்ட வண்டிய ரெடி பண்ண சொல்லு.... அஞ்சு நிமிஷத்துல கெளம்பனும்...
படப்பிடிப்பில் வரும் காட்சி
பிச்சைக்காரன்: கவலை வேண்டாம்... கவலை வேண்டாம்... வாழ்க்கையில் ஒன்றும் நிலையானது அல்ல... மது... மாது... எதுவும் நிலையற்றது... உயிர் மயிர் போன்றது... பணம்...பதவி.....ஹ ஹ...பதவி...கரி!
காட்சி ஒன்று நிறைவு பெறுகிறது....
காட்சி 2
இடம்: உள்துறை அமைச்சர் அரங்கசாமி இல்லம்
நேரம்: காலை ஒன்பது மணி
கதாபாத்திரங்கள்: மூன்று பிச்சைகாரர்கள் (படபிடிப்பில் வருபவர்கள்)
படப்பிடிப்பில் வராத கதாபாத்திரங்கள்: கட்சி தொண்டன், போலீஸ் இன்ஸ்பெக்டர், மந்திரி மற்றும் பலர்
படப்பிடிப்பில் வராத காட்சி
அரங்கசாமியின் இரங்கல் கூட்டம் அவரின் மனையில் நடந்துக்கொண்டிருக்கிறது. அரங் கசாமி கோரமான முறையில் கொலை செய்ய பட்டார்.கொலை செய்த மர்ம நபர்/கள் யாரு என்று தெரியவில்லை. மக்கள் கூட்டம் அதிகரிதுகொண்டிருக்கிறது அவரது வீட்டில். எங்கிருந்தும் அழுகை சத்தம் தான் கேட்டு கொண்டிருந்தது.
அழுகை குரல் 1: அய்யயோ அய்யயோ.... இப்படி அநியாயம் பண்ணிட்டாங்களே... பாழா போச்சே தேவரய்ய்யா...
அழுகை குரல் 2: இந்த காரியத்த பண்ணினவன் நாசமா போவான்...
போலீஸ் இன்ஸ்பெக்டர்: த்ரீ நாட் ஒன்... கேட் கிட்ட எல்லாரையும் கிளியர் பண்ணுங்க... கூட்டத்த சமாளீங்கய்யா... எழவு...
கான்ச்டபுள்: சரி சார்..
தொண்டன்: நேத்து தான் யா முதலமைச்சரோட நதி நீர் பிரச்சனைக்கு செரியான தீர்வு பத்தி பேசிட்டு இருந்தாரு.... இப்படி போட்டு தள்ளிடாங்களே.... முக அடையாளம் தெரியாத மாதிரி போட்டுடான்யா... ச...
மந்திரி: (பத்திரிகை காரர்களிடம் பேசிகொண்டிருக்கிறார்) அரங்கசா மி தேவர் என்னுடைய நீண்ட கால நண்பர்... அவர் தமிழ் நாட்டிற்க்கு ஆற்றிய பணிகளை நாம் எல்லாரும் அறிவோம்... அவருக்கு இது போன்று ஒரு கோரமான முடிவு வந்திருக்க கூடாது தான்... இது எனக்கு ஆண்டவன் இருக்கானா இல்லையா என்ற சந்தேகத்தை வரவைக்கிறது... இதற்க்கு காரணமானவர்களை வெகு விரைவில் கண்டுபிடித்து தண்டனை வாங்கிக்கொடுப்பேன்... இது இந்த தமிழ் மண்ணின் மீதும் என் உயிர் தமிழ் மக்கள் மீதும் ஆணை!
காட்சி இரண்டு நிறைவு பெறுகிறது....
காட்சி 3
இடம்: ஏதோ ஒரு இருட்டு அறை
நேரம்: காலை
கதாபாத்திரங்கள்: சுப்பிரமணி யம், சீ.பீ.ஐ ஆபிசர்கள் மூவர்
அப்போது....
சுப்பிரமணியம் ஒரு மிகச்சிறந்த சீ.பீ.அய் forensic அதிகாரியாக விளங்கினான், இது ஒரு மூன்று ஆண்டுகள் முன்பு. அதற்க்கு பிறகு அவனை ஊழல் வழக்கில் தப்பாக பதிவு செய்து அவனுடைய பதவியையும் பட்டத்தையும் ரத்து செய்துவிட்டது இந்திய அரசு. அதனால் அவனுடைய வாழ்க்கை ஒரு முற்று புள்ளி ஆகிவிட்டது. இப்போது, அரங்கசாமி கொலை வழக்கில் சுப்புவின் திறமை வேண்டும் என்று அரசு நினைக்க,மூன்று சீ.பீ.அய் அதிகாரிகள் சுப்புவை நாடி வந்தனர்.
இப்போது......
சுப்பிரமணியம் ஒரு இருட்டு அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். அந்த அறையின் ஓரத்தில் ஒரு சிறிய விளக்கு எரிந்துக்கொண்டிருந்தது.சுப்பு ஒரு பீடியை பத்த வைத்தான். அப்போது டக் டக் என்று காலணிகளின் சத்தம் கேட்டது. கதவை திறந்து கொண்டு மூன்று அதிகாரிகள் அறைக்குள் புகுந்தனர்.
அதிகாரி: குட் மார்னிங் சுப்பிரமணியம். எப்படி இருக்கீங்க? பீடிய தூக்கி போடுங்க ப்ளீஸ்... எனக்கு புகை ஒத்துக்காது...
சுப்பு: குட் மார்னிங் சீ பீ ஐ வாள்... இப்போ என்ன விஷயம்... கொல வழக்கா?
அதிகாரி: ரொம்ப ஆச்சர்ய படுவீங்கன்னு நெனச்சேன்... தப்பா போச்சு... சரி விடுங்க... விசயத்துக்கு வருவோம்.... உங்களோட வரலாறு பத்தி எங்களுக்கு நல்லா தெரியும்...
சுப்பு: ஹ.. யாருக்குத்தான் தெரியாது?
அதிகாரி: ப்ளீஸ்.... கவனமா கேளுங்க...
சுப்பு: சொல்லுங்கோ ஒய்... ஆனா எனக்கு பீடி அடிக்கணும்...
அதிகாரி: சரி.... நேரம் அவ்வளவு எனக்கு இல்லை... உங்களுக்கு உங்க பதவி, பட்டம் திரும்ப கிடைக்க இப்போ ஒரு வாய்ப்பு வந்திருக்கு... உங்க உதவி எங்களுக்கு தேவை....
சுப்பு: செவத்து கீரைய வழிச்சு கட்டடி சொரணகெட்ட பொண்டாட்டின்னு சொன்னானாம்...
அதிகாரி: உங்க நெலமை எங்களுக்கு புரியுது... நான் எல்லாத்தையும் கிளியர் பண்ணிடறேன்.. நம்புங்க...
சுப்பு: பலே பாண்டியா...
அதிகாரி: உள்துறை அமைச்சர் அரங்கசாமி தேவர் முக அடையாளம் தெரியாமல் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.....
(சுப்புவின் தன் கண்களால் கூர்மையாக அதிகாரியைப்பார்தான்)
Advanced image forensic process தேவை படுது... உங்களாலத்தான் இதை முடிக்க முடியும்... அரசாங்கத்தோட சிபெசல் ஆர்டர்... எல்லா வழக்குகளையும் உங்கமேலேர்ந்து நீக்குவோம்.... என்ன சொல்றீங்க?
சுப்பு: (பீடியை சுண்டியபடியே) சவரம் செஞ்சு வருஷகணக்காச்சு... பிளேடு வாங்க பைசா இல்லை...
(அதிகாரிகள் சிரிக்கின்றனர்...)
காட்சி மூன்று நிறைவு பெறுகிறது...
காட்சி 4
இடம்: சீ.பீ.ஐ அலுவலகம்
நேரம்: காலை
கதாபாத்திரங்கள்: பத்திரிகைக்கா ரர்கள், மூர்த்தி மற்றும் சுப்பிரமணியம்
சீ.பீ.ஐ. அலுவலகத்திற்கு முன்னால் பதிரிகைக்காரர்களின் கூட்டம் ஆட்டு மந்தையைப்போல் காட்சியளித்தது. சுப்புவும் போலீஸ் கமிஷனர் மூர்த்தியும் வெளியே வந்துக்கொண்டிருந்தனர்.
அப்போது ....
பத்திரிகைக்காரர்: சார் சார்... ஒரு கேள்வி... ப்ளீஸ்...
போலீஸ்: ஒன் பை ஒன்... அமைதி..
பத்திரிகைக்காரர்: மிஸ்டர் சுப்பிரமணியம், உங்களால எப்படி குற்றவாளி பாளைங்கோட்டை சேகர்ன்னு கண்டுபிடிக்க முடிஞ்சுது?
சுப்பு: போலீஸ்காராள் தான் உண்மையான ஹீரோ... நான் வெறும் சயின்ஸ் வர்க்கு தான் செஞ்சேன்...
பத்திரிகைக்காரர்: பாளைங்கோட்டை சேகர்க்கும் அரங்கசாமிக்கும் நட்பு இருந்ததாக சொல்றாங்களே...அது உண்மையா? உங்க கருத்து என்ன?
மூர்த்தி: சம்பந்தமில்லாத கேள்விகள கேக்காதீங்க ப்ளீஸ்...
(சுப்பு அப்போது மூர்த்தியை பார்த்து சிரித்தான்...)
மூர்த்தி: சாரி.. எங்களுக்கு நிறைய வர்க்கு இருக்கு... அப்புறம் வாங்க ப்ளீஸ்... வழி...வழி விடுங்க ப்ளீஸ்...
பத்திரிகைக்காரர்: சார்...சார். ... லாஸ்ட் கேள்வி... ப்ளீஸ்... ப்ளீஸ்....
மூர்த்தியும் சுப்புவும் அந்த இடத்தை விட்டு சென்றனர்.
காட்சி நான்கு நிறைவு பெறுகிறது....
காட்சி 5
இடம்: உள்துறை அமைச்சர் அரங்கசாமி இல்லத்தில் உள்ள வாசல் சுவரு
நேரம்: மாலை
கதாபாத்திரங்கள்: மூன்று பிச்சைகாரர்கள் (படபிடிப்பில் வருபவர்கள்), சுப்பிரமணியம்
அரங்கசாமியின் இல்லம் இருந்த தெரு ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது. சுப்பு அவனுக்கு கிடைத்த காரிலிருந்து கீழே இறங்கினான்.அரங்கசாமியின் வீட்டை பார்த்தபடியே வடிகட்டி சுருட்டை வாயில் வைத்தான். அப்போது அவனுக்கு திரைப்படத்தில் விவேக் சொன்ன வசனம் தான் ஞாபகத்துக்கு வந்தது. "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" என்று நினைத்துக்கொண்டான். வீட்டின் வாசலில் உள்ள பிச்சைகாரர்களை நோக்கி நடந்தான்.
தன் பையிலிருந்து ருபாய் நோட்டு கட்டு இரண்டை எடுத்து ஒரு பிச்சைகாரனிடம் கொடுத்தான்.
பிச்சைகாரர்கள் அவனை வணங்க, சிரித்துக்கொண்டே சுருட்டை சுண்டினான்... கார் கிளம்பியது!
கொலை செய்தது யார்? சுப்புவா? தெரியாது. சுப்புவின் ரவுத்திரத்தின் அதிரடி தான் இதெல்லாம் என்று சொன்னால் நம்புவீர்களா?
காட்சி ஐந்து நிறைவு பெறுகிறது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக